சேவாபாரதி மற்றும் ஸ்ரீ ஜெயின் தேரா பந்த் யுவக் பரிஷத் இணைந்து 12.2.2011 அன்று குடியாத்தம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ திருமண மண்டபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நம்பிக்கை நட்சத்திரம் நிகழ்ச்சியை நடத்தின.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மஹால் உரிமையாளர் கே. யுவராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். குடியாத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்-பேட்டை தலைமை ஆசிரியர் டி.எஸ். விநாயகம் தலைமையுரை ஆற்றினார். திருப்பத்தூர் பள்ளி துணை ஆய்வாளர் பி.கே. வீராசாமி முன்னிலை வகித்தார்.
சென்னை நாளைய பாரதத்தின் பொறுப்பாளர் ஏ. ராமகிருஷ்ண பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய துறை ஆசிரியர்களால் விளக்கங்கள் தரப்பட்டன. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
விழாவில் கலந்துகொண்ட எல்லா மாணவர்களுக்கும்,
* மாதிரி வினாக்கள் அடங்கிய குறிப்பேடு.
* வினாக்களுக்கு எல்.சி.டி. மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
* மனம், எண்ணம், சிந்தனைக்கு மனோதத்துவ ரீதியாக பிரபல அறிஞர்களால் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.
குடியாத்தம் தாலுக்காவில் அமைந்துள்ள 18 பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் சுமார் 1,000 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் கலந்து கொண்ட மாணவர்கள் நம்பிக்கைப் பெற்று திரும்பினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்று ஒளிவீசியதை காணமுடிந்தது.
10வது மற்றும் +2 படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் சில பத்திரிகைகள் விளம்பர நோக்குடன் விழாபோல் நடத்திவரும் நிலையில், சேவாபாரதி 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Posted by sevabharathi 

